பாரா ஒலிம்பிக்கில் கலக்கிய தமிழக வீராங்கனைகள்!
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனையிடம் 21க்கு17, 21க்கு10 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை 21க்கு 12, 21க்கு8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றதில் பெருமையின் ஒரு தருணம் ஆகும். அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவருக்கு வாழ்த்துக்கள். அதே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸின் முயற்சி சிறப்பானது ஆகும். அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த நம்பமுடியாத சாதனைக்கு வழிவகுத்தது. அவருக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாரா ஒலிம்பிக்ஸில் குறிப்பிடத்தக்க வகையில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி நம்பமுடியாத அளவிற்குப் பெருமைப்படுகிறோம். வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்துகள். உங்கள் மன உறுதி தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. ஜொலித்துக் கொண்டே இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாகத் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் பாரா பேட்மிட்ட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசின் எலைட் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தைச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம். இன்றைக்குப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.