பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கத்தை தட்டிச் சென்ற நீரஜ் சோப்ரா!

August 9, 2024 at 12:29 pm
pc

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த போட்டியில், மகளிர் 10 ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். மேலும், அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேலே வெண்கலப் பதக்கம் வென்றார். 

அதனை தொடர்ந்து, நேற்று (09-08-24) மாலை ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்திய அணி உலக தர வரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம், இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நான்கு வெண்கலப் பதக்கம் வென்றியிருந்தது.

இந்த நிலையில், இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும் இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், செக் குடியரசின் யாகூப் வட்லெஜ்ச் ஆகியோர் போட்டி போட்டனர். இதில், நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் சுமார் 89.45 மீ தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீ தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதில், இதுவரை ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக இருந்த 90.57 மீ தூரத்தை, அர்ஷத் நதீம் ஈட்டியை எறிந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை, இந்தியாவுக்கு 4 வெண்கலப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் என 5 பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா, இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website