பிரச்சாரத்தில் பெண்ணுக்கு முத்தம்: பா.ஜ.க வேட்பாளரால் எழுந்த சர்ச்சை!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க வேட்பாளர் ஒருவர், பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு எம்.பி ககென் முர்மு, பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இதனால், அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர், அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். வாக்கு சேகரிக்க சென்ற போது பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி பா.ஜ.கவை கடுமையாக சாடி வருகின்றனர்.