பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

October 4, 2024 at 2:56 pm
pc

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (03.10.2024) நடைபெற்றது. இதில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ​​“சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், முக்கியமான பொருளாதார மையமாகவும் உள்ளது. 119 கி.மீ. நீளமுள்ள 2 ஆம் கட்டத் திட்டம் 3 தாழ்வாரங்களாகப் பிரிக்கப்பட்டு 120 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.

அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோவைப் பயன்படுத்த முடியும். அதற்காக 120 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவின் பார்த்தால், ஒவ்வொரு இடத்திலிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதே போன்ற அமைப்பு சென்னை மெட்ரோவில் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடராக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த முறை, உங்களுடனான எனது சந்திப்பின் போது வலியுறுத்திய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எங்களின் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி ஆகிய 5 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website