புகார் அளிக்க வந்த சிறுமியை சீரழித்த படுபாவி சிறப்பு உதவி ஆய்வாளர்!
புகார் அளிக்க சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 2020ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, அந்த சிறுமிக்கும் அவருடைய மாமியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், பென்னாகரம் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளிக்க வந்தார். அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் அந்த சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, சகாதேவன் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே, அந்த சிறுமி தன்னுடைய கணவர் பழனிசாமி தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அங்கு இருந்த குழந்தைகள் நல உறுப்பினர்களிடம், தான் பலமுறை சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அதன் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் மீது பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை போக்சோ சட்டத்தில் பென்னாகரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். புகார் அளிக்க வந்த சிறுமியை போலீசார் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.