பெண்களை கட்டிப்போட்டு குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டி கொள்ளை!

November 29, 2024 at 9:38 am
pc

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பச்சநாயகம் குளம் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஐயப்பன் (35). இவர் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கலெட்சுமி (27) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் ஐயப்பனின் தாயார் பாக்ய செல்வி (56) வசித்து வருகிறார்.

கடந்த 9 ந் தேதி அதிகாலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஐயப்பன் வீட்டு கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவை கம்பியால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கத்தியைக் காட்டி மிரட்டி மிரட்டியுள்ளனர். தங்கச்செல்வி மற்றும் பாக்கிய செல்வி ஆகிய இருவரின் கைகளைக் கட்டி, வாயில் துணியை சத்தம் போடாமல் கட்டிவிட்டு குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என 45 சவரனை பறித்துக் கொண்டு ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கறம்பக்குடி போலீசார் தடயவியல் சோதனைகள் செய்தனர். மேலும் முகமூடி திருடர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே 2 தனிப்படைகளை அமைத்தார். இதனையடுத்து புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி வரை உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில் முகமூடி திருடர்கள் பைக்கில் வந்தது தெரிந்தது. மேலும் இவர்கள் திருச்சியில் இருந்து வந்து அதே வழியாகச் சென்றதும் தெரிய வந்தது. 

இதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் முகமூடிக் கொள்ளையர்கள் திண்டுக்கல் பகவதியம்மன் கோவில் தெரு குமார் மகன் ராஜசேகர்(31) மற்றும் மதுரை சம்மட்டிபுரம் மேட்டுத் தெரு ஜெயமணி மகன் மகேந்திரன் என்பது தெரிய வந்தது. இவர்களை தேடிச் சென்று கைது செய்த தனிப்படை போலீசார் கறம்பக்குடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து தங்க நகைகளை விற்ற கேராளா, கோவை என பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று நகைகளை மீட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை கறம்பக்குடி அழைத்து வந்த போது தப்பி ஓட நினைத்து அக்னி ஆற்றுப் பாலத்தில் இருந்து ராஜசேகர் குதித்தபோது இடது கால் மற்றும் வலது கை உடைந்த நிலையில் மீட்ட போலீசார் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் ராஜசேகர் மீது பல்வேறு மாவட்டங்களிலும் பல திருட்டு வழக்குகள் உள்ளது. பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை மட்டுமே குறிவைத்து திருடுவது இவர்களது வழக்கமாக உள்ளதாக கூறுகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website