பெண் குழந்தை விற்பனை: 5 பேர் கைது!

ஈரோடு கனிராவுத்தர் குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும். இவருக்கு எடிசன் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து நித்யா ஈரோடு மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 28) என்பவர் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார். இதன்மூலம் கர்ப்பமடைந்த வித்யாவுக்குக் கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வேண்டாம் என முடிவு செய்த நித்யா மற்றும் சந்தோஷ்குமார் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து பவானி, லட்சுமி நகரைச் சேர்ந்த சித்திகா பானு, ஈரோடு பெரிய சேமூர் பகுதி சேர்ந்த செல்வி அவருடன் இருந்த இரண்டு ஆண்களிடம் குழந்தை கொடுத்துள்ளார். அப்போது ரூ.4.50 லட்சம் ரூபாய் கைமாறியது. இந்த கொடுக்கல் வாங்கல் விவகாரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்தது. இதில் ரூ. 1.30 லட்சத்தை எடுத்துக் கொண்ட செல்வி மீதி பணத்தை சந்தோஷ் குமாரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஈரோட்டுக்கு வந்த நித்யாவை அவரது சொந்த ஊருக்குச் செல்லுமாறு சந்தோஷ் குமார் கூற இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனக்குப் பணம் வேண்டாம். குழந்தை தான் வேண்டும் என்று நித்யா கூறியதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் நித்யா தெரிவித்தார்.
அதன் பின்னர் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த வீரப்பன் சத்திரம் போலீசார் பெண் குழந்தையை விற்க இடைத்தரகராகச் செயல்பட்ட செல்வி, சித்திக்கா பானு, ஈரோடு பெரிய சேமூர் எல்லப்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த ராதா, ராசாங்காடு பகுதியைச் சேர்ந்த ரேவதி, சந்தோஷ் குமார் என 5 பேரைக் கைது செய்தனர். குழந்தையை விற்ற வழக்கில் நித்யாவும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குழந்தையை விலைக்கு வாங்கிய நாகர்கோவில் தம்பதி மற்றும் அதற்கு உதவியாக இருந்த இரண்டு இடைத்தரகர்களைப் பிடித்து விசாரிக்க ஈரோடு போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் முழுமையான தகவல் தெரிய வரும். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனத் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள 4 பெண் இடைத்தரகர்கள் இதேபோன்று வேறு ஏதும் குழந்தைகளைப் பெற்று விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.