பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்ற முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நபர் கைது!

ஈரோட்டில் பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கந்தசஷ்டி கவசம் பாடலை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் விதமாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரகாஷ்(45) என்பவர் காவி சாயம் ஊற்ற முயற்சி செய்தார்.
அப்போது சிலையின் அருகே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனை அடுத்து பெரியார் சிலைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.