போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய.. சுந்தரி சீரியல் நடிகைக்கு.. 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக சுந்தரி சீரியல் துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத் திரையுலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீனாவுக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா என்கிற எஸ்தர். இவர் சின்ன சின்ன ரோல்களில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது பெண் ஒருவர் அங்கு போதைப் பொருள் விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே போலீஸாா் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீஸாா், அந்தப் பெண்ணின் கைப்பையை சோதனை செய்தனர். அப்போது, அந்தப் பையில் அதிக வீரியம் கொண்ட 5 கிராம் அளவிலான மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவா் கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த எஸ்தா் என்கிற மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் இவர் தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், எஸ்தருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தம்பெட்டமைன் வழங்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போதைப் பொருள் வைத்திருந்த சீரியல் துணை நடிகை மீனாவை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே இந்தப் பெண் சீரியல் துணை நடிகைகள் மற்றும் திரைக் கலைஞர்கள் யாருக்கேனும் போதைப் பொருள் விற்பனை செய்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, மீனாவுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடர்ந்து மீனா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, போலீஸார் மீனாவை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.