போதை தலைக்கேறி கூலி தொழிலாளியை உயிரோடு எரித்துக்கொன்ற சிறுவர்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரன் (வயது 60). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் மகனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, தனது சொந்த உழைப்பில் கிடைக்கும் வேலையை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதியவர் சந்திரன் உடல் கருகிய நிலையில், நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது, அதிகாலை நேரத்தில் அவ்வழியாக சென்ற ஐந்து சிறுவர்கள், சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி வேட்டியில் தீ வைத்துவிட்டு சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், இருளப்பபுரம் பழைய பிளாஸ்டிக் கடைத்தெருவில் தங்கியிருந்து பணியாற்றிவரும் மதுரையை சேர்ந்த 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில், பாலாஜி என்பவனின் காதலி அவனுடன் செல்போனில் பேசாமல் இருந்ததால், விரக்தியில் காணப்பட்டுள்ளான். நண்பனின் சோகத்தை தீர்க்கும் பொருட்டு அவனுடன் இருந்த பிற 4 பேர் மது வாங்கிக்கொடுத்து, அனைவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் வழிநெடுகிலும் இருந்த கார்கள் மீது கல்லெறிந்த வண்ணம் வந்துள்ளனர்.
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனிடம் சென்று தீப்பெட்டி கேட்ட நிலையில், அவர் தன்னிடம் லைட்டர் தான் இருக்கிறது என்று லைட்டரை கொடுத்துள்ளார். லைட்டரை வாங்கியதும் வேட்டியில் தீவைத்துவிட்டு எந்தவிதமான பயமும் இல்லாமல் சுள்ளான்கள் சென்றுள்ளனர். இதனையடுத்து 15 வயது சிறுவன், பாலாஜி, லட்சுமணன், வாலேஸ்வரன், இலங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.