மகளை வளர்க்க தந்தையான தாய்!நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ..!!

முத்து நகரான தூத்துக்குடி மாவட்டத்தில்தான் மனதை நெகிழச் செய்யும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள முடிவைத்தானேந்தல் என்ற கிராமத்தை சேர்ந்த சிவாபிள்ளை என்பவர் அருகில் உள்ள செக்காரகுடி, சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாளை 20வது வயதில் திருமணம் செய்தார்.
இந்தத் திருமணம் நடந்த 15 நாளில் சிவாபிள்ளை இறந்துவிட கர்ப்பிணியான பேச்சியம்மாள், தனது மகள் பிறந்த பிறகு தனது மகளுக்கு தந்தை இல்லாத குறை தெரியக் கூடாது என்பதற்காகவும், பாலியல் சீண்டலில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஆணாக மாறியுள்ளார்.
தனது பெயரை முத்து என மாற்றிக்கொண்டு ஓட்டலில் பரோட்டா அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்துள்ளார்.
தற்போதுவரை இவரை பலரும் முத்து மாஸ்டர் என்றே அழைக்கின்றனர். இவர் பெண் என்பதும் பலருக்கும் தெரிவதில்லை.
தற்போதுவரை வறுமையின் பிடியில் இருக்கும் முத்து மாஸ்டர் என்ற பேச்சியம்மாள் தனது மகளின் திருமணத்தை ஒருவழியாக நடத்தி முடித்துவிட்டார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தவவாழ்வு நடத்தியிருக்கும் முத்து மாஸ்டருக்கு தற்போது 57 வயது ஆகிறது. இவருக்கு முதியோர் ஓய்வு தொகை கிடைக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.