மக்களே உஷார்!! ஃபெஞ்சல் புயல் ஆட்டம் எப்படி இருக்கும்? ரெட் அலர்ட் வந்தாச்சு.. வேகம் படிப்படியாக அதிகரிப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கில் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புதுவையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கில் 270 கிலோமீட்டர் தூரத்திலும், நாகையில் இருந்து கிழக்கில் 260 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை பிற்பகல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கவுள்ளது.
அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும். கனமழை கொட்டி தீர்க்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 6ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று இரவு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. எஞ்சிய வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மேற்கு மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (நவம்பர் 30) விடப்பட்டுள்ள எச்சரிக்கையில்,
தற்போது ஃபெஞ்சல் புயலின் வேகம் 10 கிலோமீட்டரில் இருந்து 13 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருந்த இடையூறுகள் நீங்கியிருப்பதால் அடுத்து வரக்கூடிய நேரங்களில் புயலின் வேகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே புயலின் பேண்ட்ஸ் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மீது விழத் தொடங்கிவிட்டன.
இதனால் மழைப்பொழிவு இருக்கும். நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரிக்கும். அதேசமயம் புயலின் கண் பகுதி எப்போது கரையை தொடுகிறதோ, அப்போது தான் கரையை கடக்க தொடங்கி விட்டதாக அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.