மக்களே உஷார்!! தமிழகம் முழுக்க இன்றிரவு கனமழை கொட்டும்!
சென்னை உட்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று நல்ல மழை கொட்டியது. இதற்கிடையே இன்றைய தினமும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் டமால் டுமீல் மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாகச் சென்னையில் நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் நல்ல மழை இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இந்த பருவமழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை கொட்டி வரும் நிலையில், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதற்கிடையே நேற்றைய தினமும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. குறிப்பாகச் சென்னையில் மாலை தொடங்கிய கனமழை இரவு வரை கூட தொடர்ந்தது என்றே சொல்லலாம்.
வெதர்மேன்: இதற்கிடையே இன்றைய தினம் மாநிலத்தில் வானிலை எங்கெல்லாம் இருக்கும்.. மழை எங்குப் பெய்யும் என்பது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை இன்றிரவு மீண்டும் டமால் டுமீல்ஸ் மழையைப் பெறச் சரியான இடத்தில் இருக்கிறது.
சூப்பர் மழை மேகங்கள் (வேலூருக்கு அருகே உள்ள சிவப்பு தக்காளி) இரவு நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளை உள்ளடக்கிய கேடிசிசி பெல்ட்டை நோக்கி நகரும். எனவே கேடிசிசி பகுதியில் மீண்டும் இன்று நல்ல மழை காத்திருக்கிறது.
தெற்கு மதுரை- திண்டுக்கல் பகுதிகளிலும் சிவப்பு தக்காளிகள், டமால் டுமீல் மழையுடன் கடுமையான புயல் வீசுகிறது. தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கேடிசிசி பகுதி, நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நல்ல இடியுடன் கூடிய மழை பெய்யும். சேலத்திலிருந்து சென்னை வரையிலான வடக்கு உள்பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களில் உள்ளன” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.