மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: மருத்துவர்கள் அதிரடி முடிவு!
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடத்தப் பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயிற்சி மருத்துவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த 8 ஆம் தேதி (08.08.2024) இரவு நேர பணியில் இருந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதோடு பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக 4வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சந்தீப் கோஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவின் அழைப்பின் பேரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது மருத்துவர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து மருத்துவ சங்கத்தினரின் சில கோரிக்கைகளை ஏற்க அரசு தயங்கியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது.
இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “இந்த வழக்கில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். பணியிடங்களில் மருத்துவர்களின் குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.