மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்தி ரூ1 லட்சம் கொள்ளை – காவல் நிலையம் எதிரில் பகீர் சம்பவம்!
காவல் நிலையம் எதிரில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு 1 லட்சம் ரூபாய் மற்றும் மளிகை சாமான்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் நிலையம் எதிரில் அஃதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (70) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். வீடும் கடையும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனிவாசனுக்கு கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 5 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சீனிவாசன் வீட்டிற்க்கு சென்று,மளிகை பொருட்கள் வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்து, கடையில் உள்ள சீனிவாசன், இவரது மகன் கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் பொழுது ஸ்ரீதர் திருடன் திருடன் என கூச்சல் போடவே அந்த மர்ம கும்பல் ஸ்ரீதரின் கையை வெட்டியுள்ளனர்.
அதன்பின் தப்பிச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சசிதரன் (23) மர்ம கும்பலை பிடிக்க முயன்ற போது மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சசிதரனின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிதரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதரை, பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு லட்ச ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.