மாறி மாறி வாழ்த்து சொல்லும் அஜித் – உதயநிதி..
கடந்த சில வாரங்களுக்கு முன்பு துபாயில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலாக, நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டதை கண்ட நெட்டிசன்கள், “இதன் பின்னணி என்ன?” என இணையதளங்களில் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்திற்காக அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு வாழ்த்து கூறினார். மேலும், அஜித்தின் கார் பந்தய புகைப்படம் ஒன்று நேற்று வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ காணப்பட்டு, அது கவனம் ஈர்த்தது.இந்நிலையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும், திரையுலக பிரபலத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்த அஜித், முதல் முறையாக உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அஜித்தின் நெருங்கிய நண்பர் விஜய், “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் நிலையில், திமுகவின் முக்கிய தலைவரான உதயநிதிக்கு அஜித் வாழ்த்து தெரிவித்திருப்பது பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் எழுப்பி வருவதோடு, அஜித்தின் எதிர்கால திட்டம் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.