மாஸ் காட்டிய கோட்டாட்சியா்.., கைவிடப்பட்ட முதியவருக்கு கோட்டாட்சியா் தலையிட்டு எடுத்த அதிரடி நடவடிக்கை
வேலூா் மாவட்டம் காட்பாடி பொன்னை கிராமத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் வயது 82. கடந்த 2008-ஆம் ஆண்டு இவரது மனைவி கோமளேஸ்வரி இறந்து விட்டாா். ரூபசுந்தரி, மலா்விழி, லலிதா ஆகிய 3 மகள்கள், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.
அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அரிசி ஆலை நடத்தி வந்த வேணுகோபால். வயதாகி வேலை செய்ய இயலாததால் கடந்த 2013-ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமாக அதே கிராமத்திலுள்ள ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 சொத்துகளையும் தனது மூன்று மகன்களுக்கும் எழுதிக் கொடுத்துள்ளாா்.
தந்தையிடம் சொத்துகளைப் பிடிங்கிவிட்டு மகன்கள் சரிவர உணவு கொடுக்காமலும், துன்புறுத்தியும் கைவிட்டுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட வேணுகோபால், மகன்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளை ரத்து செய்து மீண்டும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஜனவரி மாதம் வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.
வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சொத்துகளை பெற்றுக்கொண்ட பிறகு மகன்கள் 3 பேரும் தந்தையை உரிய வகையில் கவனிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அவரது 3 மகன்களுக்கும் எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புடைய 3 சொத்து பத்திரங்களையும் ரத்து செய்து மீண்டும் தந்தை வேணுகோபால் பெயரிலேயே மாற்ற வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.