மீண்டும் அரங்கேறிய கொடூரம்!! 2 மாதங்களாகச் சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் செய்த கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை எல்லோகேட் பகுதியில் கடலோர காவல்படை குடியிருப்பு உள்ளது. இங்கு, கடலோர காவல்படை ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி, இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த, கடலோர காவல்படை சக ஊழியர்(30 வயது) ஒருவர், சிறுமியைத் தனது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, ஊழியரின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு இருந்த 23 வயது ஊழியர், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து இழுத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், சிறுமியை அவர்கள் இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளனர்.
இதில், பயந்துபோன சிறுமியை 2 மாதங்களாக இருவரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மன உளைச்சல் அடைந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில், ஊழியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.