முதல் நாளே குவிந்த இ-பாஸ் விண்ணப்பங்கள்!
கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. மேலும் இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அதிகாரப்பூர்வமாக 05.05.2024 அன்று அறிவிக்கப்பட்டது. உதகை, கொடைக்கானல் செல்வோர் epass.tnega.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உதகை மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு இன்று (06.05.2024) காலை 6 மணி முதல் தொடங்கி உள்ளது.
அதன்படி epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகை, கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் நாளை (07.05.2024) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவது கட்டாயம் ஆகும். அதே சமயம் அரசுப் பேருந்துகளில் சுற்றுலா செல்வோருக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நீலகிரிக்கு செல்வதற்காக இதுவரை 21,446 பேர் இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். வெளிமாநில, மாவட்ட சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற இ-பாஸ் தரப்படுகிறது. வெளிமாவட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் உள்ளூர் மக்களுக்கு பச்சை நிற இ-பாஸ் தரப்படுகிறது. வெளி மாவட்ட வாகனங்களில் வேளாண் பொருட்களை ஏற்றி செல்லும் உள்ளூர் மக்களுக்கு நீல நிற இ-பாஸ் வழங்கப்படுகிறது. உள்ளூரில் இயங்கும் வெளிமாவட்ட வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து கழகம் மூலம் இ-பாஸ் பெற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.