முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயல்!
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலனை பழி வாங்க, இளம்பெண்ணொருவர் கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன். இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.
ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பே பிரிந்த நிலையில், ”உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா” எனக் கூறியதால் ஷ்ரவன் நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ரிங்கி அவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் ரிங்கியின் நண்பர்கள் ஐவர் ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர்.
பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஷ்ரவனின் காரை சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், ஷ்ரவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ரிங்கி தன்னை போன் செய்து அழைத்தது முதல் காதல் விவகாரம் வரை விவரமாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் ரிங்கியை பிடித்து விசாரித்தபோது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா கடத்தல் பழியை சுமத்தியதாக ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ரிங்கி மற்றும் அவரது ஐந்து நண்பர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.