மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்: 8 பேர் உயிரிழப்பு!
டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் புழுதிப் புயல் காரணமாக ராட்சத பேனர் விழுந்து 35 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் இன்று மாலை புழுதிப் புயல் வீசி வருகிறது. இதனால் நகரப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புழுதி புயல் காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வடாலா பகுதியில் வீசிய புழுதிப் புயலில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு குழாய்களால் ஆன சாரம் சரிந்து விழுந்து உள்ளது. பெட்ரோல் பங்க் மீது அந்த இரும்புகள் விழுந்ததில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் அந்தப் பெட்ரோல் பங்கில் இருந்த 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளே சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.