மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்ற கொடூரம்!
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(55). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் தனியாக வசித்து வந்த கிருஷ்ணவேணி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவருடைய மகன் கனகராஜ் வடுவூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி புகார் அளித்தார்.
அந்த புகாரில், கிருஷ்ணவேணி 6 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகவும், 20 பவுன் நகைகள் வீட்டில் இருந்தது எனவும், எனவே நகைக்காக யாரேனும் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த கிராமத்தில் நடந்த சாமி வீதி உலாவில் கிருஷ்ணவேணி கலந்து கொண்டதும், அதற்கு பின்னர் அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.
அவருடைய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கடைசியாக அவர் இருந்த பகுதி மகாதேவபட்டினம் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று வடுவூர் அருகே முக்குளம் சாத்தனூர் வயல்வெளியில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடுவூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்தது.
அது காணாமல் போன கிருஷ்ணவேணியின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணவேணி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவருடைய உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து கிருஷ்ணவேணி கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.