மூன்றாவதாக பெண் குழந்தை.., விரக்தியில் அடித்து கொன்று பாறையில் வீசிய தந்தை
மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்த விரக்தியில் பச்சிளம் குழந்தையை தந்தையே அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை கொன்ற தந்தை
தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன்.
இவர் தனது முதல் மனைவி முனியம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர், சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான சின்னமாவுக்கு 14 நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தையை கொன்று விடலாம் என்று சின்னம்மாவிடம் மாதையன் கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிவிட்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சின்னம்மா அவரை பின்தொடர்ந்து தேடிச் சென்றார்.
ஆனால், அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இரவு 9 மணிக்கு வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது குழந்தையை மாதையன் வீசி சென்றதை சின்னம்மா கவனித்துள்ளார்.
பின்னர், அங்கு சென்று கன்னத்தில் காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதனை அறிந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணையில், மாதையன் குழந்தையை அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்தனர்.