ரத்த சொந்தங்களிடையே நடந்த கொடுமை!! இறந்த தந்தையின் அரசுப் பணிக்காக இரண்டு சகோதரர்களை கொலை செய்த பெண்!
இறந்துபோன தனது தந்தையின் அரசு பணி கிடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்த போலராஜு என்பவர் வருவாய் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கோபி, ராமகிருஷ்ணா என்ற இரு மகன்களும், கிருஷ்ணவேணி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு போலராஜு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனால், கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும். இதனால், அவரது மூன்று பிள்ளைகளிடையே போட்டி நிலவியது.
இதில், முதல் மகன் கோபி பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்து வருகிறார். இருந்தாலும் அவர் தனக்கே தந்தையின் அரசு பணி வேண்டும் கூறி வருகிறார்.
அதேபோல பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வரும் ராமகிருஷ்ணா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் தூங்கி கொண்டிருந்த கோபி, ராமகிருஷ்ணாவை அவரது சகோதரி கிருஷ்ணவேணி கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடல்களை காரில் ஏற்றி குண்டூர் கால்வாய் மற்றும் கோரண்ட்லா மேஜர் கால்வாயில் வீசியுள்ளார்.
இதையடுத்து, கால்வாயில் இருந்து உடல்களை கைப்பற்றிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தந்தையின் அரசு பணிக்காக சகோதரர்களை கிருஷ்ணவேணி கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், கொலை செய்த கிருஷ்ணவேணியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.