விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்..!
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், நேற்று முன்தினம் கட்சியின் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் அவர் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த நிலையில், எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து பேசினார். அதுமட்டுமின்றி, அவர் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம், “2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “யூகங்களுக்கு இப்போது பதில் அளிக்க முடியாது,” என்று தெரிவித்தார்.
“தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மாநாடு நடத்துகின்றன. அந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் ஒரு மாநில மாநாட்டை நடத்தி இருக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்று அவரது ரசிகர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்,” என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
“விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லையே?” என்ற கேள்விக்கு, “அப்படி என்றால் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதாகவே அர்த்தம்,” என்று பதிலளித்தார். “அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் துணை முதல்வர் பதவி கொடுப்பீர்களா?” என்ற கேள்விக்கும், “கற்பனையான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று அவர் கூறினார்