வீடு புகுந்து கூலித்தொழிலாளி பெண்ணை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டிய கொடூரன் ..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடு புகுந்து கூலித்தொழிலாளி பெண்ணை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டிய வாலிபர். பலாத்காரம், கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யாமல் வீடு புகுந்து தாக்கியதாக வழக்கு பதிவு செய்து வடசேரி போலீசார் அலட்சியம் காட்டுவதாக வழக்கறிஞர் புகார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் என்பவரது மனைவி மாணிக்கரசி (46). இவர் வலைக்கம்பெனி ஒன்றில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். தனி வீடாக இவர்களது அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாணிக்கரசி வழக்கம் போல் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை திறந்து வைத்த நிலையில் அருகில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டினுள் வரும் போது வாலிபர் ஒருவர் கதவிற்கு பின்புறம் மறைந்து நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிர்ச்சியில் சத்தம் போடுவதற்கு முன் அந்த வாலிபர் வீட்டில் இருந்த அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். உடல் முழுக்க ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கி, மீண்டும் அவரது தலையில் வெட்டியுள்ளார். இதில் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டின் வெளியே அந்த பெண்ணின் கணவர் வரும் சத்தம் கேட்டதும் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த வாலிபரது புகைப்படத்தை காண்பித்து அடையாளம் கேட்ட போது, புத்தேரிக்கு அருகாமையில் உள்ள ஆனப்பொற்றை என்கிற பகுதியை சேர்ந்த 25 வயது உடைய சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. சந்தோஷ் மீது ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 வழக்குகள், பெண்களை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கு என 6 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தான் ஒரு வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் இதனை பலாத்காரம், கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல், பெண்ணை தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் சாதாரணமான அடி தடி வழக்கு போன்று பதிவு செய்துள்ளனர். இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுகிறது என வழக்கறிஞர் சிவாஜி என்பவர் குற்றம்சாட்டினார். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்தை சந்தித்து, இது சம்பந்தமாக வழக்குப்பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.