ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்டில் நடந்த திருட்டு..80 லட்சம் மதிப்புள்ள BMW கார் திருட்டு…
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட வந்த தொழிலதிபரின் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் தொலைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, விஜய் நடித்த குஷி மற்றும் பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ஒரு ரெஸ்டாரண்ட் மும்பையில் உள்ள தாதர் கோஹினூர் ஸ்கொயர் கட்டிடத்தின் 48வது மாடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபல தொழிலதிபர்களும் பணக்காரர்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரண்ட்டுக்கு தனது BMW காரில் வந்தார். அவர் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு பார்க்கிங் பொறுப்பாளரிடம் சாவியை கொடுத்துவிட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்தபோது, அவர் கார் காணவில்லை.
அதிகாலை 2 மணியளவில் கார் திருடப்பட்டது என கண்காணிப்பு சிசிடிவி கேமராவில் இருந்து தெரிய வந்துள்ளது. இது குறித்து சிவாஜி பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட காரின் மதிப்பு 80 லட்சம் என்றும், கார் திருட்டுக்கு பார்க்கிங் பொறுப்பாளருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.