2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை!
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி பரவிய நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இது கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார்.
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Transcatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.