6 மாதங்களுக்குள் போதைப்பொருளை இல்லாமல் செய்ய முடியும்!- என்கிறார் தேசபந்து.

December 21, 2023 at 6:43 pm
pc

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் சுற்றிவளைப்புகளில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இவற்றுள் செவ்வாய்க்கிழமை இரவு புளுமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை, சட்டவிரோத மதுபானம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹொரனை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை கொரியர் சேவையூடாக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து இதன்போது வெவ்வேறு வகையான போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் மீனவர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 184 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் மாவா மற்றும் 19,507 போதைப்பொருள் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website