7 பேர் வாழ்வில் ஒளியேற்றிய தஞ்சைப் பேராசிரியை உடலுறுப்பு.

January 8, 2021 at 12:15 pm
pc

தஞ்சாவூரில், சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியை கனிமொழி என்பவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. `சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர், இன்று தன் உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்துவிட்டு, எங்களை விட்டுச் சென்றுவிட்டார்’ என்று கண்ணீர் வடித்தார், கனிமொழியின் அண்ணன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் சேர்ந்தவர், இளங்கோ. இவர், அரசுப் பேருந்தில் நடத்துநராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் கனிமொழிக்கு 25 வயது ஆகிறது. இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கார் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கனிமொழியை மீட்டு, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்து, அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கனிமொழியின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க, அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.ஒரு சிறுநீரகம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என மொத்தம் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை மற்றும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது குறித்து கனிமொழியின் அண்ணன் சதீஷ்குமாரிடம் பேசினோம். “கனிமொழி எங்க வீட்டு இளவரசி. அவள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் தொல்பொருள் ஆய்வு நிறைஞர். யாரையும் ஏமாற்றவோ, எதையும் லஞ்சம் கொடுத்து சாதிக்கவோ பிடிக்காது. லஞ்சம் என்ற வார்த்தையைக்கூட அவள் உச்சரித்தது கிடையாது. படித்த இடங்களிலும் சரி, வேலை பார்த்த இடங்களிலும் சரி, எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வந்தார்.

எங்களுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்கே பெருமை தேடித் தந்தவர். சின்ன வயசிலேயே தொல்பொருள் அறிஞராக வர வேண்டும் என நினைத்தார். அதன்படி, தான் நினைத்ததைத் தன் கடின உழைப்பால் சாதித்தார். இன்னும் சாதிக்கவேண்டிய பொண்ணு. அதற்குள் இந்த விபத்து, அவர் கனவில் மட்டுமல்ல எங்கள் எல்லோர் மனத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. வாழ்கையில் பெரும் உயரத்திற்குச் செல்லக்கூடியவளை, இவ்வளவு சீக்கிரமே இறைவன் அழைத்துக்கொண்டு, எங்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளான். இதை எப்படி நாங்க தாங்கப் போகிறோம் எனத் தெரியவில்லை.சிறு வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவள், தன் உடல் உறுப்புகளைப் பலருக்குத் தானமாகக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாள். அன்பால் எங்களைக் கட்டிப்போட்டவள், இளவரசியாக வீட்டில் துள்ளிக் குதித்தவள், இன்று எங்களுடன் இல்லை. இது ஒரு கனவாக இருக்கக் கூடாதா என மனது கிடந்து தவிக்கிறது” என்று கண்ணீர் வடித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website