94 வயதிலும் ஜனநாயக கடமையை முடித்து உயிரை விட்ட மூதாட்டி!
வரும் மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே மக்களவை தேர்தளுக்கு வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியது.
தமிழக மாவட்டமான திருப்பூரில், கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கினை அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று முன்தினம் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (94 வயது) வீட்டிற்கும் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தபால் வாக்கு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயம்மாள் இன்று உயிரிழந்தார். 94 வயதிலும் தனது ஜனநாயக கடமையை முடித்து மூதாட்டி உயிரை விட்டது பேசப்பட்டு வருகிறது.