சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: வட மாநில வாலிபர் கைது!
சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூர் ஊரைச் சேர்ந்த கேசவன் மகன் கிரன் குமார் (21) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் சிறுமியின் அங்கங்கள் குறித்த புகைப்படத்தை அவ்வாலிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் கிரண்குமார் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ரகுபதி உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூருக்கு சென்று வாலிபர் கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வாலிபர் கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.