சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் புதிய வழக்கு!
யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த மே மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 5 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் சி.எம்.டி.ஏ. (CMDA) அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.
சவுக்கு சங்கர் தற்போது மதுரையில் உள்ள மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதற்கான நகலை சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்கியுள்ளனர்.