திருமண கோலத்தில் இருந்த புதுமணத்தம்பதியை காரில் கடத்தி சென்ற கும்பல்!
தமிழகத்தில் சுயமரியாதை திருமணம் செய்த காதல் ஜோடி திருமணம் முடிந்த சில நிமிடங்களில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்தவர்களைத் தாக்கினர். செல்வன் மற்றும் இளமதி ஜோடியை அடித்து காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் செல்வனை மீட்டனர். தொடர்ந்து இளமதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே காதல் ஜோடியை கடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.