கொடுமையோ கொடுமை!! ‘சடலங்கள் விற்பனை’:கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை..
நாட்டையே உலுக்கி இருக்கும் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத சடலங்களை- உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்களுக்கு பெருந்தொகைக்கு விற்பனை செய்து சினிமாவின் கதாபாத்திரங்களை மிஞ்சுகிற ஒரு தாதாவாக சந்தீப் கோஷ் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
பயிற்சி மருத்துவரின் மரணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு பல்வேறு பின்னணிகள் இருக்கலாம்.. குறிப்பாக இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் ஊழல் முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி, முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அக்தர் அலி கூறியதாவது: ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத அடையாளம் தெரியாத சடலங்களை விற்பனை செய்து வந்தார் சந்தீப் கோஷ். அத்துடன் மருத்துவ கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் சந்தீப் கோஷ். இது தொடர்பான விசாரணைக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இந்த விசாரணைக் குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ் மீது மேற்கு வங்க அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இந்த அறிக்கையை சமர்ப்பித்த நாளிலேயே நான் ஆர்ஜி கர் மருத்துவமனையில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன். எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20% கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒன்றாக இருந்தது. இவ்வாறு அக்தர் அலி கூறினார்.