‘தூக்கில் ஏற்றப்பட்ட நாய்கள்’- மரித்த மனிதத்துவம்!
நாய்களை மரத்தில் தூக்கில் ஏற்றி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது மூலனூர் ஊராட்சி ஒன்றியம். இந்த பகுதியைச் சேர்ந்த முலையாப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினராக நாகராஜ் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே மூலனூர் பகுதியில் இரண்டு நாய்களை கழுத்தில் கயிறை கட்டி மரத்தில் தூக்கிலேற்றிக் கொன்றதாக பிராணிகள் வதை தடுப்பு அலுவலகத்திற்கு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், ‘கிட்டுசாமி என்பவரின் வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய் என இரண்டு நாய்களை மரத்தில் தூக்கிலேற்றி கொலை செய்துள்ளார்கள். பன்னீர், பாலசுப்பிரமணி, காந்தி சாமி, நடராஜ் உள்ளிட்ட 20 பேர் சேர்ந்து இந்த செயலை செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மரத்தில் நாய்கள் தூக்கில் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகாரை தொடர்ந்து நாய்களை தூக்கில் ஏற்றியதாகக் கூறப்படும் 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.