காணாமல் போன சிறுவன் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
முன்பகையின் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக மாவட்டமான திருநெல்வேலி, ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு 3 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த இவருடைய மகனை காணவில்லை என்று தேடியுள்ளனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர், குழந்தையை காணவில்லை என்று அவரது பெற்றோர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தை எதிர்வீட்டிற்கு சென்றதாக சிலர் கூறியுள்ளனர்.
அப்போது, எதிர்வீட்டு பெண்மணி தங்கத்திடம்(40) பொலிஸார் விசாரணை செய்தனர். அப்போது அவர் முரணாக பேசியதால் விசாரணையை தீவிரப்படுத்திய போது சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது அந்த பெண், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, வாஷின் மெஷினுக்குள் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர், சிறுவனின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சிறுவனை கொலை செய்த தங்கம் என்ற பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் 15 வயது மகன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்துள்ளார்.
இதில், எதிர்வீட்டு விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம் குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால், அவர்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிறுவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.