மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல் விதிப்பு!
சென்னையில் உள்ள இரு அரசுப் பள்ளிகளில் அண்மையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சொற்பொழிவை நடத்திய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 7ஆம் தேதி (07.09.2024) போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட மகாவிஷ்ணு இன்று (11.09.2024) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஏற்கனவே மகாவிஷ்ணுவின் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன், மகாவிஷ்ணுக்கு முன் ஜாமீன் கோரி மனு அளித்த நிலையில் தற்போது ஜாமீன் மனு மீதான விசாரணையும், போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி கோரியுள்ள மனு மீதான விசாரணையும் விசாரணைக்கு வர இருந்தது.
இதனையடுத்து இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், புழல் மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நான்காவது அமர்வு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் தான் கொடுத்த ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்த மகாவிஷ்ணு, போலீஸ் தரப்பு கேட்ட கஸ்டடி மனுவில் எனக்கு எந்த ஆட்சியப்பனையும் இல்லை. போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.