“பதவி விலகத் தயார்” – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

September 13, 2024 at 9:59 am
pc

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொல்கத்தாவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 10 ஆம் தேதி (10.09.2024)) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்படு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களிடம் உரையாற்றினார். அதில், “மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். முதல்வர் பதவியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும். நீதி வழங்கப்படுவதைப் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன். பயிற்சி மருத்துவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடந்த முடிந்தவரை முயற்சித்தேன். அவர்கள் வந்து தங்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நான் அவர்களுக்காக 3 நாட்கள் காத்திருந்தேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்காதபோதும், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், துணைவேந்தர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் 3 நாட்கள் காத்திருந்தேன்.

போராட்டத்தில் ஈட்டுப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த நாட்டு மக்களிடமும், உலக மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவர்களாகிய நீங்கள் தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். மன்னிக்கவும். எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. சாமானிய மக்களுக்கு நீதி வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர்கள் தங்கள் பணியில் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 3 நாட்கள் கடந்தாலும், சில சமயங்களில் பொறுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் நாங்கள் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில சமயம் இது போன்ற சூழலில் பொறுத்துக் கொள்வது நம் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website