ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!
கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கரீம் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற கரீம் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
உடனடியாக உடன் வந்த நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பகுதிக்கு சென்று கரீமை மீட்க முயன்றனர். ஆனால் கரீம் நீருக்குள் மூழ்கியதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கரீமின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.