“தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பு உள்ளது” – திருமாவளவன்!
கடந்த அக்.2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ”காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார்.
தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால் திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் எனக்கும் அந்த பழக்கம் இல்லை. தப்பி தவறி கூட நாவில் ஒரு சொட்டு மது கூட பட்டதில்லை” என பேசியிருந்தார்.
திருமாவளவனின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “விசிக தலைவர் திருமாவளவனை இதுவரை நாகரீகம் தெரிந்த அரசியல்வாதி என நினைத்துக்கொண்டிருந்தேன். மாநாட்டில் பேசியதை பார்த்தால் அவரை வக்கிரத்தின் அடையாளமாக பார்க்கிறேன். பரந்த மனப்பான்மையோடு பிரதமர் மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். கொள்ளை வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “ தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. தமிழிசை செளந்தரராஜனின் விமர்சனத்தால் என் மனம் புண்பட்டதா?. என் கருத்து தமிழிசை செளந்தரராஜனைக் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
காந்தி மண்டபத்தில் ஆளுநருக்கு பிறகு மாலை அணிவிக்கலாம் என போலீஸ் தடுத்ததால் கிளம்பிவிட்டேன். மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபத்திற்கு சென்றேன். குற்ற உணர்வில் திருப்பிச் சென்றதாக கூறுவது எப்படி சரியாகும்?. பட்டியலின மக்கள் மீதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கரிசனத்துக்கு நன்றி. பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் பட்டியலின மக்களின் நிலை என்ன என்பதை ஆளுநர் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நிலை குறித்து ஆளுநர் சொன்னது உண்மையெனில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.