“நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது தவறு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன்” – சச்சிதானந்தம் எம்.பி.!
தமிழகத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஓட்டுகள் கூடுதல் வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தார். அந்த அளவுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார் உட்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பம்பரமாக வேலை பார்த்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைத்தனர்.
இவ்வாறு வெற்றி பெற்ற எம்.பி. சச்சிதானந்தம் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எம்.பி.ஆபீஸ் மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் எம்.பி. சச்சிதானந்தம் பேசும் போது, “என்னுடைய வெற்றிக்கு இந்தியா கூட்டணி தான் காரணம். இரண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையில் பேசி உள்ளேன்.
மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது தவறு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளேன். நிதி மசோதாவில் பேசியுள்ளேன். வரி விதிப்பு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஜிஎஸ்டி மக்களுக்குப் பெரிய பாதிப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளேன். விமான நிலையங்கள் அனைத்தும் தனியாருக்குக் கொடுப்பது பொருத்தமற்றது. லீஸுக்கு கொடுக்கும் போது மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது.
இதுவரை 500 மனுக்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக அந்தந்த துறைக்கு அனுப்பி நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயில் அறிவித்தவுடன் திண்டுக்கல்லில் நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை, தலைகாய சிகிச்சை இல்லை. ஆகையால் 292 கோடிக்கான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது போல் பழநியில் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் பழநி சட்டமன்ற உறுப்பினருடன் சேர்த்து அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ. 5 கோடியினை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 80 லட்சம் எனப் பிரித்துள்ளேன். நாடாளுமன்ற அலுவலகம் அமைப்பதற்குத் திண்டுக்கல் மாநகராட்சியில் இடம் கேட்டு இருக்கிறேன். தற்பொழுது கட்சி அலுவலகத்தில் ஆபீஸ் போட்டதின் பேரில் என்னை மக்கள் நேரடியாகச் சந்தித்து குறைகளையும் கோரிக்கைகளையும் கூறி வருகிறார்கள். அவற்றை நிறைவேற்றியும் வருகிறேன். என் அலுவலகம் 24 மணி நேரம் செயல்படும்.
அதுபோல் திண்டுக்கல் – சென்னை ரயில், திண்டுக்கல் – காரைக்குடி புதிய ரயில்கள் தேவை என்பதனை ரயில்வே மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். இப்படி நான் வெற்றி பெற்று நூறு நாளில் பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன்” என்று கூறினார். இந்த பேட்டியின் போது திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி. முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி உள்படக் கட்சி பொறுப்பாளர்கள் சிலர் இருந்தனர்.