இந்த மூன்றையும் கொடுக்க முடியாத அரசாங்கம் இருந்தா என்ன? போனா என்ன? – விஜய் ஆவேசம்!

October 28, 2024 at 7:35 pm
pc

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் பின்னணியில் இசைக்க, மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை வழியில் த.வெ.க. செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகிய 5 தலைவர்களைத் தான் நம்முடைய கொள்கைக்கு வழிகாட்டியாக வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நீண்ட நேரம் பேசிய விஜய், மருத்துவ மாணவி அனிதாவின் மரணம் எனது தங்கை வித்யாவின் மரணத்தை போன்ற வலியையும் வேதனையையும் கொடுத்தது என்றார். 

விஜய் பேசுகையில், “எங்களுடைய இந்த அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள். என்னுடைய அக்கா தங்கைகள், என்னுடைய அம்மாக்கள், என்னுடைய நண்பிகள். என் கூடபிறந்த தங்கை வித்யா இறந்தபோது எனக்குள்ள பெரிய பாதிப்ப ஏற்படுத்தியது. அதில் கொஞ்சம் கூட குறையாத பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியதுதான் தங்கை அனிதாவின் மரணம்.

தகுதி இருந்தும் தடையாக இருக்கிறது இந்த நீட் தேர்வு. அப்போதுதான் முடிவு எடுத்தேன். விஜய் அண்ணா விஜய் அண்ணா என்று மனதார அழைக்கும் இந்த பெண் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை என்று அனைத்திலும் நிரந்தர பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இனிமே கவலைபடாதீங்க… உங்கள் அண்ணா, உங்கள் தம்பி, உங்கள் தோழன், உங்கள் விஜய் களத்திற்கு வந்துவிட்டேன். உங்களின் உறவா, நட்பா என்ன பார்க்கும் குட்டீஸ் முதல் பாட்டிஸ் வரை அனைவருக்குமான ஆளா நான் இருப்பேன். 

என்னுடைய அரசியல் குறிக்கோள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்குச் சோறு, வருமானத்திற்கு வேலை. இதுதான் எங்களது அடிப்படை குறிக்கோள். இந்த மூன்றிற்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாத அரசாங்கம் இருந்தால் என்ன? போனால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website