சென்னையை உலுக்கிய கொடூர கொலை!

November 3, 2024 at 6:44 pm
pc

சென்னையில் அயன் பாக்ஸால் சூடு வைத்து 15 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் வசித்து வருபவர் முகமது நவாஸ். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முகமது நவாஸ் பழைய கார்களை வாங்கி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி நாசியா. இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வீட்டை பராமரிப்பதற்காக 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்.

தஞ்சாவூரை சேர்ந்த அந்த சிறுமி தந்தை இல்லாததால் குடும்ப வறுமை காரணமாக அமைந்தகரையில் உள்ள முகமது நவாஸ் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் நவாஸின் வீட்டில் சிறுமி சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வெளியானது. உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று போலீசார் கதவை திறந்து பார்த்தபோது குளியல் அறையில் சிறுமி சடலமாக கிடந்தது தெரியவந்தது.

சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நவாஸ் அவருடைய மனைவி நாசியா மற்றும் வீட்டிற்கு அடிக்கடி காரில் வந்து சென்ற லோகேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

வீட்டு வேலைக்காக வந்த அந்த ஏழை சிறுமி தன்னுடைய மகனுடன் நெருங்கி விளையாடுவதை கண்டு எரிச்சலடைந்த நாசியா அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். பலமுறை சொல்லியும் சிறுமி கேட்காமல் குழந்தையுடன் விளையாடியதால் ஆத்திரமடைந்த நவாஸ், லோகேஷ் ஆகியோர் சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடுவைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்நிலையில் தீபாவளியன்று சிறுவனுடன் விளையாடிய சிறுமியை கண்டித்த நவாஸ், லோகேஷ், நாசியா ஆகியோர் அயன் பாக்ஸ் மூலம் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதில் சிறுமி உயிரிழந்த நிலையில் அவருடைய சடலத்தை குளியலறையில் வைத்து மறைத்துள்ளனர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் ஊதுபத்தியை கொளுத்தி வைத்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சடலத்தை எப்படி வெளியே கொண்டு வந்து அகற்றுவது என தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டு மூவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக நவாஸ், நாசியா, லோகேஷ், ஜெய்சக்தி, மகேஸ்வரி, சீமா ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறுமிக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் இருப்பதோடு சிறுமியின் மார்பில் அயன் பாக்ஸில் சூடு வைத்திருப்பது உறுதியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொடூர சம்பவம் சென்னை அமைந்தகரையில் அரங்கேறி உள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website