யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.., விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ்
இர்ஃபான் தனது மனைவியின் பிரசவத்தின் போது தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது மனைவியின் பிரவசத்தில் அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்.
இந்த விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை இர்பான் மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்” என்று கூறியிருந்தார்.
அதன்படி, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இதையடுத்து, யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
தற்போது, இச்சம்பவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதியளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.