நீண்டநேர உடற்பயிற்சி: குளிக்கும்போது மூக்கில் ரத்தம் வழிந்து இறந்த நபர்
தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேரம் உடற்பயிற்சி
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35 வயதான இவர் தினமும் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த மகாதீர், பின்னர் நீராவி குளியல் எடுத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகாதீர் வெளியே வராததால், அவரது ஓட்டுநர் குளியல் அறையின் கதவை தட்டியுள்ளார்.
மயங்கி விழுந்து மரணம்
பதில் ஏதும் வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மகாதீர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மகாதீர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மகாதீரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.