விஜய்யின் தவெகவில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்.. மாரி செல்வராஜ் உறவினர்..
இயக்குனர் மாரி செல்வராஜின் உறவினர் மற்றும் அவர் இயக்கிய ’வாழை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடத்தினார். அந்த மாநாடு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநில மாநாட்டிற்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், அவருடைய கட்சியில் யாரும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாடி பாலாஜி உள்பட ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே அவரது கட்சியில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் ’வாழை’ திரைப்படத்தில் நடித்த பொன்வேல் என்ற நடிகர், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இவர் மாரி செல்வராஜின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததாகவும், அவருக்கு கட்சி கொடி அணிவித்து, தமிழக முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வரவேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.