ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே சென்ற தம்பி குத்திக்கொலை – அண்ணன் கைது
மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்தவர் துர்கேஷ் (வயது24). இவர் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து புனேயில் இருந்து மும்பை திரும்பினார். நேற்று முன்தினம் துர்கேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அப்போது ஊரடங்கு இருப்பதால் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என அவரது அண்ணன் ராஜேஸ் (28) எச்சரித்தார். எனினும் அதை பொருட்படுத்தாமல் வாலிபர் வெளியே சென்றார்.
இந்தநிலையில் வாலிபர் வெளியே சுற்றிவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது ஊரடங்கு இருக்கும் வேளையில் ஏன் வெளியே சென்றாய் என ராஜேஸ், தம்பியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ் கூர்மையான ஆயுதத்தால் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த துர்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாம்தா நகர் போலீசார் ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.