என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது – நடிகை குஷ்பு
நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு கொரோனா தொடர்பான பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து டுவீட்களை வெளியிட்டு வந்தார். ஆனால் கடந்த 2 நாட்களாக அவருடைய ட்விட்டர் தளத்தில் எந்தவொரு டுவீட்டுமே வெளியாகவில்லை. தற்போது தனது டுவிட்டர் கணக்கின் நிலை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது என டுவிட்டர் எனக்கு ஒரு செய்தி அனுப்பியது. மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று முறை எனது கணக்குக்குள் நுழைய முயன்றுள்ளனர். கடந்த 48 மணிநேரங்களாக என்னால் என் கணக்குக்குள் லாக் இன் செய்ய முடியவில்லை. பாஸ்வேர்டையும் மாற்ற முடியவில்லை.
டுவிட்டர் தரப்பிலிருந்து உரிய உதவி கிடைக்கவில்லை. எனது கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். நன்றி. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்”. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.