இலங்கை எதிர்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா !! ஏகமனதாக ஐ.தே.க தீர்மானம்.

இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதில் கோத்தபய ராஜபக்சேவிற்கும், சஜித் பிரேமதாசாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடித்து வாக்கு எண்ணிக்கையின் போது சஜித் பிரேமதாசாவை விட அதிக வாக்குகள் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவராக இருந்த சஜித் பிரேமதாசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் அண்மைக்காலமாக நீடித்துவந்த இழுபறிக்கு இன்று முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கையின் எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஐ.தே.கயின் தலைமைத்துவ பொறுப்புகளில் விக்ரம்சிங் நீடிக்கவுள்ளதாகவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.